முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, அவர் சிறையில் இருந்தபோது அவரது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சிறை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்ஷன் பெல்லனா, ஆரம்பத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.