முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு: 5 இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு: 5 இராணுவத்தினர் கைது

முல்லைத்தீவில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப் பகுதியில் அண்மையில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்படவிருந்த நிலையில், அங்கிருந்த தகரங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த முகாமில் இருந்து தகரங்கள் தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.

இதையடுத்து, தகரங்களை எடுப்பதற்காக ஐந்து இளைஞர்கள் அந்த இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற இளைஞர்களை இராணுவத்தினர் தடிகள் மற்றும் கம்பிகளால் தாக்கி விரட்டியதாகவும், அதனால் பயந்து ஓடியதாகவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்பு மற்றும் விசாரணை

இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் திரும்பிய நிலையில், ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இளைஞன் ஓடும்போது முகாமுக்குப் பின்னால் உள்ள முத்தையன்கட்டு குளத்தில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. இதனால் கிராம மக்கள் குளத்தில் இறங்கித் தேடியபோது, அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இறந்த இளைஞரின் சகோதரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தனது தம்பியை இராணுவத்தினர் அடித்துக் கொலை செய்து குளத்தில் போட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்த இளைஞரின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.