தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், “அவர் இறந்திருந்தால், அதற்கான தகுந்த ஆதாரத்தை எங்கள் கண்முன்னே நேரில் சமர்ப்பிக்க வேண்டும்!” என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவரும், முன்னாள் போராளியுமான தேவராஜா தீபன் இன்று அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் தேசத்தில் வீரவணக்கக் கூட்டத்திற்கு எதிர்ப்பு!
ஆகஸ்ட் 2, 2025 அன்று புலம்பெயர் தேசத்தில் தமிழீழ தேசிய தலைவருக்கு வீரவணக்கக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தேவராஜா தீபன் இந்த ஊடகச் சந்திப்பை நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தினார்.
“சுயநலத்திற்காக முடிவெடுக்க முடியாது!”
“தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்பது பிரச்சினை இல்லை. இல்லை என்றால் அதற்கான ஆதாரம் தர வேண்டும். எங்கள் கண்முன்னே வாழ்ந்த ஒரு தலைவர் இறந்தார் என்றால் எங்கள் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் வீர வணக்கக் கூட்டத்தை நடத்துவதென்ற முடிவுக்கு வரமுடியும். தங்கள் சுயநலங்களுக்கும் தங்களது விருப்பங்களுக்கும் எங்களால் இதனைச் செய்ய முடியாது,” என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.