- மக்கள் சாப்பாட்டை குறைத்துக்கொண்டனர், குறைந்த ரக உணவை உண்டனர், அல்லது உணவின் அளவை குறைத்துக்கொண்டனர்.
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 12.2% இலிருந்து 17% ஆக அதிகரித்துள்ளது.
- வறுமை விகிதம் 2019ஆம் ஆண்டின் அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து 24.5% ஆக அதிகரித்துள்ளது.
- 2021க்கும் 2024க்கும் இடையில் உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கைப்படி, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு பாதுகாப்பின்மை ஏற்பட்டதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாப்பாட்டை தவிர்ப்பது, குறைந்த ரக உணவை உண்பது அல்லது உணவின் அளவை குறைத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை கையாண்டுள்ளன. மேலும், 27 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் போதுமான உணவை உட்கொள்ளவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் (OHCHR) உலக உணவுத் திட்டத்தை (WFP) மேற்கோள் காட்டி, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த 2025ஆம் ஆண்டு அறிக்கையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள குடும்பங்களில் 16 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12.2 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் வறுமை விகிதம் 24.5 சதவீதமாக உள்ளது, இது 2019ஆம் ஆண்டின் அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காகும் என OHCHR கூறுகிறது. 2021க்கும் 2024க்கும் இடையில் உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக மீட்சி ஏற்பட்டாலும், வேலைவாய்ப்பும் உண்மையான ஊதியமும் நெருக்கடிக்கு முந்தைய அளவை விட குறைவாகவே உள்ளன, இதன் விளைவாக வறுமை மற்றும் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.9 சதவீதம், அல்லது அரசாங்க வருவாயில் கிட்டத்தட்ட 60 சதவீதம், அரசாங்க கடன்களுக்கான வட்டி செலுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. “சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 1.83 மற்றும் 1.88 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட அதிகரிப்பைக் காட்டுகிறது, மேலும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான முறையே மூன்று மற்றும் ஆறு சதவீத ஒதுக்கீட்டை நோக்கிய நடவடிக்கையாகும்” என்றும் அறிக்கை கூறுகிறது.
பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூறல் இல்லாமல் உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. “குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்குத் தொடரவும் தண்டிக்கவும் அரசின் விருப்பமின்மை அல்லது இயலாமை பல முக்கியமான வழக்குகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் இல்லாததன் மூலம் நன்கு விளக்கப்பட்டுள்ளது” என்று OHCHR கூறியது.
ஏப்ரல் 22, 2025 அன்று, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக அரசாங்கம் OHCHRக்கு அறிவித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும் 280க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன, இன்னும் ஒரு வழக்கில் கூட தண்டனை வழங்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம், ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் நிலை மற்றும் இருப்பிடத்தை தெளிவுபடுத்தவில்லை, மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது. “தொடர்ச்சியான அரசாங்கங்கள், குறிப்பாக 2019-2022 காலகட்டத்தில், நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் இல்லாத உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் இந்த நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.” 2024 டிசம்பர் நிலவரப்படி, காணாமல் போனோர் அலுவலகம் பதிவு செய்யப்பட்ட 15,000 வழக்குகளில் 18 நபர்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளது.