Posted in

வவுனியாவில் பரபரப்பு: கைக்குண்டுகளுடன் சிக்கிய நபர்!

வவுனியாவில் நடத்தப்பட்ட ஒரு அதிரடி தேடுதல் வேட்டையில், பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 86 கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரபத்கொடையில் (Piliyandala) ஒரு T56 துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இந்த பயங்கர சதி அம்பலமாகியுள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல், கிரபத்கொடையில் T56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டான். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவன் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு இந்த துப்பாக்கியைக் கொண்டு வந்ததும், குற்றச் செயல்களுக்காக வேறொரு கும்பலுக்கு துப்பாக்கியை கொடுத்துவிட்டு, மீண்டும் வவுனியாவுக்கே கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், வவுனியா குற்ற விசாரணைப் பிரிவினர் களமிறங்கினர். நேற்று  செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் நேரியகுளம் பகுதியில், முதலாம் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மற்றொருவன் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

கைது செய்யப்பட்ட இந்த இரண்டாம் சந்தேக நபர், நேரியகுளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனத் தெரியவந்துள்ளது. இவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவனது வீட்டிலும் தோட்டத்திலும் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட ஒரு பரலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான 86 கைக்குண்டுகள், 321 T56 ரக தோட்டாக்கள், மற்றும் 5600 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் பதுக்கலுக்குப் பின்னாலுள்ள முழு சதி வலையையும் வெளிக்கொண்டுவர பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Loading