செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவற்றை மக்கள் பார்வைக்கு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வருகிற செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதுவரை மீட்கப்பட்ட பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உட்பட மொத்தம் 54 பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் தற்போது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தப் பொருட்களைப் பார்த்து அடையாளம் காணக்கூடியவர்கள், அது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ தெரிவித்து, விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் பொருட்களைப் பார்வையிட வருபவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.