திருகோணமலை மாவட்டத்தில், சூரிய சக்தித் திட்டம் ஒன்றுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை, முத்துநகர் பகுதியில் 600 ஏக்கர் நெல் வயல்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும், வனப்பகுதிகள் அத்துமீறிக் கையகப்படுத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். கையகப்படுத்தப்பட்ட தமது விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி, போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாக முன்னர் உறுதியளிக்கப்பட்ட போதிலும், நீண்ட நாட்களாக காத்திருந்தும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனால், அவர்கள் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவியது.