ஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில், ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதை அறிவித்தார்.
சமீபத்தில் வெளியான ‘கூலி’ படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்துக்காக லோகேஷ் சொன்ன கதையும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான ரஜினியின் திருப்தியால், தனது நண்பர் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கு ஒரு கதை இருக்கிறதா என்று நெல்சனிடம் ரஜினி கேட்டுள்ளார். நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துப் போனதாகவும், கமல்ஹாசனும் இந்தக் கதைக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ரஜினி – கமல் படம் தொடங்குவதற்கு முன்பாக, சூப்பர் ஸ்டார் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘அருணாச்சலம்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுந்தர். சி, ரஜினிகாந்தை வைத்து ஒரு பக்கா காமெடி ஜானர் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை முடித்தபின் சுந்தர். சி, ரஜினியுடன் கைகோப்பார் என்றும், அந்தப் படத்தைத் தொடர்ந்துதான் நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைவார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆக, ரஜினியின் அடுத்த படம் சுந்தர். சி இயக்கத்தில் ஒரு நகைச்சுவைப் படமாக இருக்கும் என்றும், அதை முடித்த பின்பே நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணையும் மெகா ப்ராஜெக்ட் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.