கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் அஜித் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி, தமிழ் சினிமா உலகில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலைக் குறிப்பிட்டுப் பேசிய நடிகர் அஜித், “கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த, எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். “கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையுமே மோசமாகக் காட்டுகிறது,” என அவர் கவலை தெரிவித்தார்.
“ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனைக்கூட நான் பள்ளிக்குக் கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது,” என்றும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் கருத்து குறித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்குப் பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாகப் பேட்டி அளித்து இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பல்வேறு கட்சித் தலைவர்களும் பதில் அளித்துள்ளனர்,” என்று உதயநிதி கூறினார்.
தொடர்ந்து அவர், “இதற்கான பேட்டியை அளிக்க வேண்டியவரிடம் (விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டு) நீங்கள் இன்னும் பேட்டி எடுக்க முயற்சிக்கவில்லையா? அல்லது அவர் பேட்டி கொடுக்க விரும்பவில்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை,” என்று சாடினார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“நடிகர் அஜித்தின் பேட்டியை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அதனால், அதுபற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. அது அவருடைய சொந்தக் கருத்து. அது எந்தக் கருத்து என்றாலும் பாராட்டத்தக்கது,” என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.