தமிழர் வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் அவர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரையும், மாமல்லபுரம் அழைத்து அங்கே உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்துள்ளார். சந்திப்பு நடைபெற்று வெளியே வந்த மக்களில் எவருமே விஜய் மீது குற்றம் கூறவில்லை. பத்திரிகையாளர்கள், TV, மற்றும் சமூக வலைத்தள நிருபர்கள் என பலரும் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டும், எவருமே விஜய் மீது பழியைப் போடவில்லை. மாறாக, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஷயம் தமிழ் நாட்டையே புரட்டிப் போட்டு உள்ளது.
தலை முடி கூட வெட்டவில்லை, ஷேவ் எடுக்கவில்லை, மிகவும் கேவலமான ஒரு நிலையில் தான் அவர் இருந்தார். எங்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டார் என்றும், அவரை இப்படிப் பார்க்க எங்களால் முடியவில்லை என்றும் பொது மக்கள், விஜயைப் பார்த்து பரிதாபப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களுக்காக, அவர்களது குடும்பத்தினரை அழைத்து விஜய் ஆறுதல் சொல்லத் தொடங்கினால், அந்தக் குடும்பத்தார் விஜய்க்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு இருக்கிறது என்றால், மக்கள் செல்வாக்கு எந்த அளவு இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டி உள்ளது.
எங்களை 4 காரில் அழைத்துச் சென்றார்கள், காலை 8 மணிக்கே இட்லி சாப்பிடத் தந்தார்கள். எனக்கு காப்பீடு (Insurance) போட்டுத் தந்துள்ளார், படிப்புச் செலவுக்கு உதவினார் என்று பலரும் விஜயைப் புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள். இதனால் தமிழ் நாட்டில் விஜய்க்கு இருந்த ஆதரவு தற்போது பன்மடங்காகப் பெருகியுள்ளது. விஜய் தங்களை சந்தித்த நேரத்தில் ஒரு கேமரா அங்கே இருக்கவில்லை. யாரும் இல்லை, வீடியோ எடுக்கவில்லை, எந்த விளம்பரத்தையும் அவர் விரும்பவும் இல்லை. விஜய் அவர்கள், சுத்தமான மனதோடு எங்களைச் சந்தித்தார், எங்கள் வாக்கு விஜய் அண்ணாவுக்குத் தான் என்று பேட்டி கொடுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.
விஜய்க்கு அதிகரித்துள்ள இந்த ஆதரவு ஒரு அனுதாபமாக மாறியுள்ளது. அனுதாபம் என்பது வாக்கு. எனவே வரவிருக்கும் தேர்தலில் விஜய்க்கு மேலதிக வாக்குகள் கிடைக்கப் பெரும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 23 சதவிகித வாக்கு வங்கி அவருக்கு இருக்கிறது என்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் 30 சதவிகிதத்தை விஜய் தொட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும். ஒரு நல்ல நம்பிக்கை மிக்க தலைவராக, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் தலைவராக மக்கள் விஜயைப் பார்க்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தி.மு.க-வின் வாக்கு வங்கியும் 25 சதவிகிதம் தான். ஆனால் 15 சதவிகித மக்கள் நடுநிலையான மக்கள். தேர்தல் என்று வரும்போது அவர்கள் யாருக்கு வாக்குப் போடுகிறார்களோ அந்தக் கட்சியே நிச்சயம் வெல்லும் என்பது தமிழ் நாட்டில் காலங்காலமாக நடந்து வரும் ஒரு விஷயம். அந்த வகையில் பார்த்தால் இந்த 15 சதவிகித வாக்கும் இம்முறை விஜய் பக்கம் சாயவே பெரும் வாய்ப்புகள் உள்ளது.
ஒன்றுமே இல்லை… கரூர் சம்பவம் நடந்த உடனே, “இது ஒரு பெரும் துயரச் சம்பவம்” எனவே மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ இதனை விசாரிக்கும் என்று மட்டும் அறிவித்து விட்டுப் பேசாமல் சென்னையில் ஸ்டாலின் இருந்திருந்தால், இந்த அளவு விஜய்க்கு ஆதரவு பெருகி இருக்காது. யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போல, தி.மு.க-வினர் உள்ளே புகுந்து, ஆடிய நாடகத்தை மக்கள் இனம் கண்டு கொண்டார்கள். இன்று வரை தி.மு.க தனது சன் TV ஐ நம்பி இருக்கிறது. ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை சமூக வலைத்தளங்களைத்தான் இன்று மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்று. இவர்கள் விட்ட பெரும் பிழை இன்று விஜய்யை இவர்களே தூக்கி சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளார்கள்.