தமிழ் திரையுலகில் யாரும் எட்ட முடியாத உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித் குமார், இப்போது சர்வதேச கார் ரேசிங் களத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்காகத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த முயற்சியில் அவருக்கு அடுத்த மிகப்பெரிய ஆதரவாக, முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (RCPL) நிறுவனம் கைகோர்த்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட், அஜித் குமார் ரேசிங் அணியின் (Ajith Kumar Racing Team) அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக (Official Energy Partner) இணைவதாக நேற்றையதினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கேம்பா எனர்ஜி (Campa Energy) குளிர்பான பிராண்ட், இந்த அணியின் ஆதரவாளராக மாறியுள்ளது.
இந்த கூட்டணி, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸை உலக அரங்கில் உயர்த்துவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டணி முயற்சி இரண்டு பிராண்டுகளுக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிக்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம்பா எனர்ஜி பிராண்டை விளையாட்டு அணிகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்தியின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய அஜித் குமார் ரேசிங் அணி, துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளது. இந்த அணி, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் (Creventic 24 Hour European Endurance Championship) மூன்றாவது இடத்தைப் பிடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் சாதனை படைத்த ஒரு சூப்பர் ஸ்டாரின் கார் ரேசிங் முயற்சிக்கு, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஜாம்பவான்களில் ஒருவரான ரிலையன்ஸின் ஆதரவு கிடைத்திருப்பது இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.