கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் எழுந்த விமர்சனங்களைக் கடந்து, ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மற்றும் அதன் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் தற்போது மீண்டும் பொதுவெளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஒரு மாதம் அமைதி காத்திருந்த நிலையில், கரூர் விபத்து வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு தவெக இயக்கம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நெரிசலில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தக் கோரச் சம்பவம், தவெக அமைப்பில் போதிய கட்டமைப்பு இல்லாதது மற்றும் விஜய் கூட்டத்துக்கு தாமதமாக வந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது. இது தவெக மற்றும் விஜய் மீது பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.
“விஜய், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல் செய்கிறார்”, “பனையூர் பண்ணையார்” என்று எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். கரூர் சம்பவம், இந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழாமல் இருக்க, தவெக-வில் அதிரடி மாற்றங்களைச் செய்ய விஜய் முடிவெடுத்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விமர்சனங்களுக்கு இடம் அளிக்காமல், கட்சியை வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
- சமீபத்தில், கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்தார்.
- இதனைத் தொடர்ந்து, கட்சியின் புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
- மக்கள் கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்தவும், கட்சி நிகழ்வுகளைச் சிறப்பாக ஒழுங்கமைக்கவும் தொண்டரணியில் பல மாற்றங்களை தவெக கொண்டுவர உள்ளதாம்.