Posted in

திமுகவைச் சீண்டிய தவெக தலைவர் விஜய் – வைரலாகும் கிண்டல் பேச்சு!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதி காத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், தற்போது அதே விவகாரத்தை ஒரு அரசியல் அஸ்திரமாக எடுத்து ஆளும் திமுக மற்றும் அதன் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக-வின் சிறப்புக் பொதுக்குழு கூட்டத்தில், கரூர் விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய விஜய், உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியதைக் கிண்டல் செய்யும் விதமாகச் செய்த செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் விஜய்யின் முக்கியப் பேச்சு:

“கரூர் சம்பவம் நடந்த பின் காவல்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தது ஏன் என்று மக்களே கேட்டனர். அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்.”

“கரூர் விவகாரம் தொடர்பாகச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அத்தனை வடிகட்டிய பொய்.”

“கோரிக்கையே வைக்கப்படாமல் எஸ்ஐடி அமைக்கப்பட்டது ஏன் என்று உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. 1972-க்குப் பின் திமுகவை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆள் இல்லாததால், திமுக தலைமை இப்படியே தான் இருக்கிறது. இப்போது நாங்கள் கேள்வி கேட்கவில்லை… இதெல்லாம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.”

“தமிழக அரசு மீதான நம்பிக்கையும் மண்ணிற்குள் புதைந்துவிட்டது. இது புரியவில்லை என்றால், திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் அழுத்தமாகப் புரிய வைப்பார்கள்.”

 

 வைரலாகும் கிண்டல் செயல்:

விஜய் பேசிக்கொண்டிருந்த போது, “உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே..” என்று கூறிவிட்டு, சில நொடிகள் தன் வாயில் கையை வைத்து, சிரித்து கிண்டல் செய்தார்.

பின்னர் சிரிப்புடன் தொடர்ந்தவர், “பார்த்ததல்லவா. இதையும் முதல்வர் அவர்கள் மறந்துட்டாரா?” என்று கேள்வி எழுப்பி திமுகவையும், முதல்வரையும் நேரடியாகச் சீண்டினார்.

விஜய்யின் இந்தக் கிண்டல் பேச்சு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

பிரபுதேவா – வடிவேலு நடித்த ‘மனதைத் திருடிவிட்டாய்’ படத்தில், வடிவேலு ஒரு காட்சியில் வாயில் கைவைத்து சிரிக்கும் ரியாக்ஷன் மிகவும் பிரபலம். அதை நினைவுபடுத்தும் விதமாகவே விஜய் இவ்வாறு செய்ததாக அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இந்த வீடியோவை மீம்ஸ்களாகவும், பதிவுகளாகவும் வைரலாக்கி வருகின்றனர்.

திமுகவையும், முதல்வரையும் நேரடியாகத் தாக்கியிருப்பதால், இதற்குப் பதிலடி கொடுக்க திமுக நிர்வாகிகளும் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டனர்.