கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி அலை! 2025 ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின் வெறியை அடக்க முடியாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதிகள்’ என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி இழிவாகப் பேசியிருப்பது உலக அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோஷின் நக்விக்கு ஆதரவு என்ற பெயரில் ஆளுநர் பேசிய வார்த்தைகள் அநாகரிகத்தின் உச்சம்!
இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்க மறுத்து, கோப்பையைத் தூக்கிக்கொண்டு சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (மற்றும் உள்துறை அமைச்சர்) மோஷின் நக்வியைப் பாராட்டி ஆளுநர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
சர்ச்சையின் பின்னணி என்ன?
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால், பரிசளிப்பு விழாவில் கோப்பையை வழங்க மேடையில் நின்ற மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். (நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால், அவரிடமிருந்து கோப்பையை ஏற்க முடியாது என இந்திய அணி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது). இதனால், வெட்கக்கேடான முறையில் நக்வி கோப்பையைத் தன்னுடன் காரில் எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலடியாக, கோப்பை இல்லாத மேடையில் இந்திய வீரர்கள் ‘காற்றில்’ கோப்பையைத் தூக்கிக் கொண்டாடிய வீடியோ வைரலானது.
ஆளுநரின் கொடூரமான பேச்சு!
இந்தச் சூழலில், மோஷின் நக்வியைப் புகழ்ந்து பேசிய ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி, அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.
டெஸ்ஸோரி பேசிய அதிர்ச்சி வரிகள் இதோ:
“இந்திய அணி கோப்பையைப் பெற வரவில்லை… நமது சேர்மன், நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட என்பது அவர்களுக்குத் தெரியாது. பின்னர் அவர் (நக்வி) இந்திய அணியை தீவிரவாதிகளைக் கையாள்வது போல கையாண்டார். அவர் கோப்பையை காரில் வைத்து எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் கோப்பைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.”
கொந்தளிப்பில் கிரிக்கெட் உலகம்!
இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதி’ என்று ஆளுநர் அழைத்தபோது, அருகில் அமர்ந்திருந்த மோஷின் நக்வி அதை மறுக்காமல், சிரித்து மகிழ்ந்த காட்சி, இந்த விவகாரத்தின் மீதான கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது!
விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஒரு நாட்டின் ஆளுநரே விளையாட்டு வீரர்களை இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தையால் அழைப்பது, விளையாட்டுத் தர்மத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயல் என இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக கிரிக்கெட் ரசிகர்களும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்! இது அப்பட்டமான வெறுப்புப் பேச்சு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியை விளையாட்டில் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் பலர் கொதித்தெழுந்துள்ளனர்.