நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மாற்று என்று கூறிவரும் நிலையில், நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலி கான், நடிகர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “வானத்தில் சுற்றாமல், தரையில் கால் பதியுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்
மன்சூர் அலி கான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதன் முக்கிய அம்சங்கள்:
“நான் ஒரு நடிகன். நான் இன்றைக்கு ஏதோ புதிதாகப் போராடவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டிலேயே ஆளுநர் மாளிகைக்கு எதிராகப் போராடி சுமார் 35 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். நான் பல கட்சிகளில் இருந்தாலும், யாரையும் ஏமாற்றிவிட்டேன் என்று என் மீது எந்தப் புகாரும் இல்லை. மனதில் பட்டதைப் பேசுகிறேன்,” என்று அவர் தனது அரசியல் நேர்மையைப் பற்றிப் பேசினார்.
“என்னுடைய போராட்டமும் பிரச்சாரமும் தரையில் கால் பதியும். விஜய் போல வானத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க மாட்டேன்.”
விஜய்யின் காலைத் தூக்கிக் காட்டி, “இந்தக் கால் தரையில் பட வேண்டும். அடிமட்ட மக்களைச் சென்று சந்திக்க வேண்டும். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள், சாலைகளில் இந்தக் கால் பட வேண்டும்.”
“விமானத்திலேயே சென்றுவிட்டு விமானத்திலேயே வந்தால், பணக்காரனுக்குத் தான் சொம்பு அடிப்பார்கள். பணக்காரனுக்குத் தான் பல்லாக்கு தூக்குவார்கள். பேரறிஞர் அண்ணா எப்படி இருந்தார்? ஆனால் இன்றைக்குத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு வருபவர் எல்லாம் அப்படியா இருக்காங்க?”
கடுமையான வார்த்தைகள்: “விஜய் இப்படி இருந்தால் ஒன்றும் பண்ண முடியாது, ஒரு ஆணியும் புடுங்க முடியாது,” என்று நேரடியாக விமர்சித்துள்ளார்.
பாஜகவை ஆதரிக்கும், அல்லது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச கட்சிகள் என்றும், அவர்களால் தமிழ்நாட்டிற்குப் பலன் இல்லை என்றும் மன்சூர் அலி கான் தெரிவித்தார்.
“2026 ஆம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நானே அக்கட்சிக்காக வேலை செய்தாலும் செய்வேன். வேறு வழி இல்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே, சக நடிகரான மன்சூர் அலி கானின் இந்தக் கடுமையான விமர்சனம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.