லண்டனில் சீனாவின் ‘மெகா ஸ்பை ஹப்’? – பிரிட்டிஷ் உளவுத்துறையின் பச்சைக் கொடியால் அதிரும் பிரிட்டன்!
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டவர் ஆஃப் லண்டன்’ (Tower of London) அருகே உள்ள ராயல் மின்ட் கோர்ட் (Royal Mint Court) பகுதியில், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய சீனத் தூதரகத்தைக் கட்ட அந்நாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 225 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் சீன அரசு வாங்கிய இந்த இடத்தில், 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் தூதரகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிய உள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தத் திட்டத்திற்கு, தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தூதரகம் அமையவுள்ள இடத்திற்கு அடியில் லண்டனின் முக்கிய நிதி மற்றும் தகவல் தொடர்பு கேபிள்கள் செல்வதால், அங்கிருந்து சீனா உளவு பார்க்க வாய்ப்புள்ளதாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, திட்டத்தில் கூறப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட நிலத்தடி அறைகள் (Basement rooms) உளவு வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், பிரிட்டிஷ் உளவுத்துறையான MI5 மற்றும் GCHQ ஆகியவற்றின் தலைவர்கள், இந்த அபாயங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று உறுதியளித்த பிறகே அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த முடிவை “வெட்கக்கேடான சரணாகதி” என்று பிரிட்டிஷ் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். “சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு லண்டனின் இதயப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான உளவுத் தளத்தை (Spy Hub) பிரதமர் பரிசாக வழங்கியுள்ளார்” என்று நிழல் வெளியுறவுத்துறைச் செயலாளர் ப்ரீத்தி படேல் சாடியுள்ளார். மேலும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் சீன எதிர்ப்பாளர்களைக் கண்காணிக்கவும், அச்சுறுத்தவும் இந்தத் தூதரகம் ஒரு முக்கிய மையமாக மாறும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், லண்டனில் சிதறிக் கிடக்கும் சீனாவின் 7 வெவ்வேறு அலுவலகங்களை ஒரே இடத்திற்குக் கொண்டு வருவதால், உளவுத்துறையினர் அவர்களைக் கண்காணிப்பது இனி எளிதாகும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த ஒப்புதலின் மூலம் சீனாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மேம்படும் என்றும், விரைவில் பிரதமர் கீர் ஸ்டார்மர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள பிரிட்டன் தூதரகத்தை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
அரசு அனுமதி அளித்திருந்தாலும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். “எங்கள் வீட்டின் அருகே இவ்வளவு பெரிய கோட்டையைக் கட்டுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறும் குடியிருப்பாளர்கள், இதற்காக 1.45 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்டி வருகின்றனர். இதனால் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் இன்னும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம். டிரம்பின் சர்வதேச அதிரடிகள் ஒருபுறம் இருக்க, பிரிட்டனின் இந்தச் சீன ஆதரவு நிலைப்பாடு உலக அரசியலில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
