இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, அண்மையில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்திற்கு இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியாவிடம் தோற்ற சரித்திரத்தை மாற்றியமைத்த கிவிஸ் படை, தற்போது இன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் கைப்பற்றி தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது.
இந்த முக்கியமான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் உள்ள VCA மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு எந்த டி20 தொடரையும் இழக்காமல் பலமாக உள்ளது. குறிப்பாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இந்தத் தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்க வாய்ப்புள்ளது. திலக் வர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் உறுதி செய்துள்ளார். கேப்டன் சூர்யகுமார் கடந்த சில போட்டிகளில் போதிய ரன்களைக் குவிக்காததால், உலகக்கோப்பைக்கு முன்னதாக அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 12 முறையும், நியூசிலாந்து 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் நியூசிலாந்து வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது என்பது இந்திய அணிக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்தில் இருக்கும் நியூசிலாந்தைச் சமாளிக்க இந்தியா கடும் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
நாக்பூர் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்பதால் இன்றைய போட்டியில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற அனுபவ வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஸ்டார் செயலி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்தப் போட்டியில், இந்தியா ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பழிவாங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
