கிரீன்லாந்து விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது டென்மார்க் எம்பி ஆண்டர்ஸ் விஸ்டிசென், டிரம்ப்பை நேரடியாகவும் ஆவேசமாகவும் சாடியதுடன், சர்வதேச மேடை என்றும் பாராமல் அவரை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான எம்பி விஸ்டிசென் பேசுகையில், “அதிபர் டிரம்ப் அவர்களே, நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்; கிரீன்லாந்து கடந்த 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இது ஒரு தனி நாடு, இது விற்பனைக்கு அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டிரம்ப்பிற்குப் புரியும் மொழியில் சொல்வதாகக் கூறி, மிகவும் தரக்குறைவான ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி அவரைத் திட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தை உருவாக்கியுள்ளது.
விஸ்டிசென் இவ்வாறு பேசியபோது, நாடாளுமன்றத் துணைத் தலைவர் நிகோலே ஸ்டெஃபானுட்டா உடனடியாகக் குறுக்கிட்டு அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “அரசியல் ரீதியாக உங்களுக்கு எவ்வளவு பலமான உணர்வுகள் இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளுக்கு முரணாக இத்தகைய பொருத்தமற்ற மொழியைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” என்று அவர் எச்சரித்தார். இருப்பினும், கண்டனத்திற்குப் பிறகு விஸ்டிசென் தனது உரையை டேனிஷ் மொழியில் தொடர்ந்து முடிக்க அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம், உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் (WEF) பங்கேற்பதற்காக டிரம்ப் டாவோஸ் சென்றடையும் ஒரு நாளைக்கு முன்பாக நடந்துள்ளது. இன்றைய கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றுள்ள நிலையில், அவர் கிரீன்லாந்து விவகாரம் குறித்து நிச்சயம் தனது கருத்தைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் இந்தத் தீவிர எதிர்ப்பையும், டென்மார்க் எம்பியின் ஆவேசத்தையும் அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பார்க்க உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன.
