தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் நாட்களில் தனி ஹெலிகாப்டர் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு விஜய் இந்தப் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இணையாக தவெக வளர்ந்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக-வுக்கு இணையான கட்டமைப்புகள் இல்லாவிட்டாலும், சாமானிய மக்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்குப் பிறகு திமுக சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட விஜய்க்கு 23% வாக்குகள் இருப்பதாகத் தெரிய வந்தது. இதனால், தவெக-வுடன் எப்படியாவது கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தீவிரமாக உள்ளன. ஆனால், முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைக்க விஜய் தயக்கம் காட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், விஜய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் சாலைகளில் விஜய் பயணிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும். மேலும், விஜய்யைப் பார்க்க அதிகளவில் மக்கள் கூடுவார்கள், தனி விமானம் மூலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து பிரச்சார வாகனத்தில் பயணிக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் பார்க்கப்படுகிறது. விஜய்யைப் பின்தொடர்ந்து ஒரு கூட்டம் தொடர்ந்து வரும் என்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணியைப் பின்பற்ற விஜய் முடிவு செய்துள்ளார்.
இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘பிரச்சாரப் பயணம்’ என்றில்லாமல், பொதுக்கூட்டங்களை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளார். அந்தப் பொதுக்கூட்டத்திற்குத் தனி விமானம் மூலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று களமிறங்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொண்டர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
கரூர் சம்பவத்தில் விஜய்யின் தாமதமும் ஒரு காரணம் என்று சட்டமன்றத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனால், விஜய்யின் பிரச்சாரத்தில் இனி நேர தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெங்களூரைச் சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் ஓராண்டுக்கு 4 ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது.