தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக வீசப்படும் விசாரணை அம்புகள் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையின் ‘அதிகாரப்பூர்வமற்ற’ ரகசிய அறிக்கை ஒன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேசைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்களைக் கவனித்து வரும் உள்துறை அமைச்சர், குறிப்பாக விஜய் மீதான இந்த வழக்கைத் தீவிரமாக உற்று நோக்குவது ஏன்? விஜய் அந்த அளவிற்கு ஒரு அரசியல் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறாரா என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
டெல்லி காவல்துறையின் கீழ் இயங்கும் சிபிஐ, நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதன் காரணமாக, விஜயிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான ஒவ்வோர் அசைவையும் ஆய்வு செய்யும் அதிகாரம் அமித் ஷாவிற்கு உண்டு. கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்தின் போது விஜய்க்கு இருந்த பொறுப்பு, அவரது தாமதமான வருகை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தயாரித்துள்ள விரிவான ரிப்போர்ட், விரைவில் டெல்லி மேலிடத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 7 மணி நேரத்திற்கும் மேலான சிபிஐ விசாரணையில், விஜய் தரப்பு சற்று திணறியதாகத் தெரிகிறது. சிபிஐ அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும், பெரும்பாலான கேள்விகளுக்கு “எனக்குத் தெரியாது”, “ஞாபகம் இல்லை” என்ற ரீதியிலேயே அவர் பதிலளித்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் இந்த மௌனமும், பிடிகொடுக்காத பதில்களும் விசாரணை அதிகாரிகளுக்கு அவர் மீது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, இந்த வழக்கில் ஆரம்பத்தில் ‘சாட்சி’ (Witness) என்ற நிலையில் இருந்த விஜய், தற்போது ‘சந்தேகத்திற்குரியவர்’ (Suspect) என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் வர ஏன் தாமதமானது என்ற கேள்விக்கு, “சாலை வளைந்து நெளிந்து இருந்தது” என விஜய் அளித்த பதில் அதிகாரிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இவ்வளவு தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கருதும் சிபிஐ, விஜய்யின் பதில்களில் உள்ள முரண்பாடுகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
