அமெரிக்காவில் விசா காலாவதியாகியும் தங்கி இருக்கும் நபர்களையும், அகதிகளையும் கழுத்தைப் பிடித்துக் கைது செய்து வெளியேற்றி வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீரென அந்தர் பெல்டி அடித்து அதனை நிறுத்தியுள்ளார். என்னடா இப்படி இவர் செய்யமாட்டாரே என்று அகதிகள் சிந்தித்துக்கொண்டு இருக்க, வேறு விதமான செய்திகள் தற்போது வெளியாகிறது. அதாவது அமெரிக்க ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவத்தில் ஆட்களைச் சேர்க்க இந்த அகதிகளைப் பயன்படுத்தலாம் என்றும், ஈரான் போன்ற நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பும் தருணம் வந்தால், இந்த அகதிகளைப் பலிகடா ஆக்கலாம் என்பது தான் ட்ரம்ப்பின் திட்டமாக இருக்கிறது.
அதற்காக அவர் என்ன செய்ய நினைக்கிறார் என்றால், அமெரிக்க ராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட வருடம் கடமையாற்றினால், அமெரிக்க விசா கிடைக்கும் என்பது போல ஒரு அறிவித்தலை வெளியிட இருக்கிறார். ஆனால் அந்த குறிப்பிட்ட காலம் வரை அந்த நபர் உயிரோடு இருக்க வேண்டுமே? எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள். இது போக அமெரிக்காவில் ராணுவத்திற்குக் கட்டாய ஆள்சேர்ப்பைக் கொண்டு வருவது தொடர்பாகவும் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார் என்ற செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான பென்டகன், அந்நாட்டு இளைஞர்களைக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கும் ‘ஆட்டோமேட்டிக் டிராஃப்ட்’ (Automatic Draft) முறையைக் கொண்டு வந்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, 18 முதல் 25 வயது வரையிலான மில்லியன் கணக்கான இளைஞர்கள், அவர்களின் அனுமதியின்றியே ராணுவ சேவையில் தானாகவே பதிவு செய்யப்படுவார்கள். தேர்தலில் வாக்கு அளிக்கப் பதிவு செய்வதை கடினமாக்கும் குடியரசுக் கட்சியினர், போர் என்று வந்துவிட்டால் மட்டும் இளைஞர்களைத் தானாகவே முன்வந்து ராணுவத்தில் சேர்க்கத் துடிப்பது ஏன் என எதிர்க்கட்சியினர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேறிகளுக்கும் (Illegal Migrants) இந்த விதியில் ஒரு ‘அதிர்ச்சி’ திருப்பம் வைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் கடும் குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக, அவர்கள் ராணுவ சேவையில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும், தவறினால் அமெரிக்கக் குடியுரிமை உள்ளிட்ட எந்தச் சலுகையும் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. “முடிவில்லாப் போர்களில் இருந்து நாட்டை மீட்பேன்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ட்ரம்ப், தற்போது வெனிசுலா மற்றும் ஈரான் மீது போர் தொடுத்துவிட்டு, அதற்குத் தேவையான வீரர்களைத் திரட்ட இப்படி ஒரு தந்திரத்தைக் கையாளுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.
கடந்த மார்ச் மாத இறுதியில் ‘செலக்டிவ் சர்வீஸ் சிஸ்டம்’ (Selective Service System) இந்தத் தானியங்கிப் பதிவு விதியை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் முதல் இளைஞர்களின் விவரங்கள் அரசுத் தரவுகளில் இருந்து நேரடியாகத் திரட்டப்பட்டு ராணுவப் பட்டியலில் சேர்க்கப்படும். “இளைஞர்கள் வாக்களிப்பதைத் தடுக்க நினைக்கும் மேகா (MAGA) ஆதரவாளர்கள், அவர்கள் போர்க்களத்தில் பலியாவதை மட்டும் எளிதாக்குகிறார்கள்” எனப் பல அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஈரானுடனான போர் மற்றும் வெனிசுலா அதிபர் மதுரோவைக் கைது செய்யப் படை அனுப்பியது போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்கா தற்போது ஒரு போர்ப் பதற்றத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது