ஈரானில் உள்ள மனித நாகரீகத்தையே அழித்து விடுவேன் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்டியதை, பல உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. “அப்படியென்றால் அணு குண்டை வீசப் போகிறீர்களா?” என்று பல நிருபர்கள் கேள்வி கேட்டு டொனால்ட் ட்ரம்ப்பைத் துளைத்து எடுத்துவிட்டார்கள். இதற்கிடையில், அமெரிக்கா ஈரான் மீது இரண்டு இடங்களில் அணு குண்டு வீசத் திட்டம் தீட்டி வருவதாகச் செய்திகள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றன. இதனால், வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
‘டாக்டிகல் நியூக்ளியர் பாம்’ (Tactical Nuclear Bomb) என்று அழைக்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அணு குண்டைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்பு சபை ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் பாதுகாப்பு சபை இதற்கு ஒப்புதல் கொடுத்தால், அணு குண்டு வீச ட்ரம்ப் தயங்கப் போவதில்லை. ஆனால், தற்போது அமெரிக்க மக்களே இதனை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்த மக்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஓட்டுப் போட்டு அவரை ஜனாதிபதி ஆக்கினார்களோ, அவர்களே இப்போது அவரை வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் அழிக்க அமெரிக்க அதிபர் எப்படி விரும்புகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருப்பதோடு, ஜனாதிபதி பதவியில் இருக்க டொனால்ட் ட்ரம்ப் தகுதியானவரா என்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும் ஈரானில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின்சார ஆலைகளை அழிக்க ட்ரம்ப் எடுத்த நடவடிக்கையை அமெரிக்க காங்கிரஸ் சபை நிராகரித்தது ஊர் அறிந்த விஷயம். ஒரு பாலைவன நாட்டில், கடல் நீரைச் சுத்திகரிக்கும் ஆலையை அழித்தால், அங்கே எத்தனை மில்லியன் மக்கள் நீர் இன்றிப் பரிதவித்து இறப்பார்கள்?
ஈரான் நாட்டில் உள்ள குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும் என்ன பாவம் செய்தார்கள்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் இப்படி என்றால், துணை ஜனாதிபதி அவரை விட மோசமான நபராக இருக்கிறார். மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், “ஈரான் போரில் நாம் வெற்றி பெற இயேசுவைக் கும்பிடுங்கள்” என்று கூறியதற்கு வத்திக்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல இயேசுவின் துணை வேண்டுமா?” என்று வத்திக்கான் கேள்வி எழுப்பியுள்ளது. இப்படியான மோசமான நிலையில் தான் இன்றைய அமெரிக்கா இருக்கிறது.
பிரித்தானியாவில் டீசல் விலை 1.97 பவுண்டுகளாக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் ஒரு லிட்டர் 2 பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ஆரம்பித்த இந்தப் போர், இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது.