அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) இதழுக்கு இன்று (மார்ச் 30, 2026) அளித்துள்ள பேட்டியில், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் கைப்பற்றுவது தங்களுக்கு ஒரு சவாலே அல்ல என்று தெரிவித்துள்ளார். “ஈரானின் எண்ணெயை எங்களது கட்டுப்பாட்டில் எடுப்பதே எனக்குப் பிடித்தமான விஷயம். கார்க் தீவில் அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பு அரண்களும் இருப்பதாக நான் நினைக்கவில்லை; எங்களால் அதனை மிக எளிதாகக் கைப்பற்ற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்தியது போல, ஈரானின் வளங்களையும் அமெரிக்கா கைப்பற்றும் என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை தற்போது 50,000-ஐத் தாண்டியுள்ளது.குறிப்பாக, தரைப்படைத் தாக்குதலில் வல்லமை பெற்ற 82-வது ஏர் போர்ன் டிவிஷன் (82nd Airborne Division) மற்றும் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் (Marines) இப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கார்க் தீவு போன்ற முக்கிய இடங்களைக் கைப்பற்றி நீண்ட காலம் அங்கேயே தங்கியிருந்து பாதுகாக்கும் திட்டத்தை பென்டகன் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப்பின் இந்த ‘தரைப்படை ஊடுருவல்’ குறித்த பேச்சு, ஈரான் உடனான மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
மறுபுறம், ட்ரம்ப் தனது பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார். ஈரானின் புதிய அதிகார மையமாகப் பார்க்கப்படும் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Qalibaf), பாகிஸ்தான் நாட்டுக்கொடி ஏந்திய 20 எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.“முதலில் 10 கப்பல்களை அனுமதித்தனர், இப்போது 20 கப்பல்கள் செல்கின்றன.இது அவர்கள் எங்களுக்குத் தரும் ஒரு பரிசு” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானுடன் பாகிஸ்தான் மூலமாக மறைமுகப் பேச்சுவார்த்தைகள் (Indirect talks) வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஈரான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் கெடு விதித்துள்ளார்.
இருப்பினும், கார்க் தீவு மீதான தாக்குதல் என்பது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 116 டாலராக உயர்ந்துள்ள நிலையில், ஈரான் தனது எல்லையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவோம் எனப் பதிலடி கொடுத்துள்ளது.13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை ஏற்கனவே தாக்கிவிட்டதாகக் கூறும் ட்ரம்ப், இன்னும் சில நாட்களில் ஒரு ‘ஒப்பந்தம்’ ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.