ஈரான் மீதான தனது 48 மணி நேரக் கெடு இன்றுடன் (ஏப்ரல் 7, 2026) முடிவடைய உள்ள நிலையில், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியக்கூடும்” என அதிபர் டிரம்ப் பதிவிட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த ஆக்ரோஷமான போக்கைக் கண்டித்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் (House of Representatives) ஜனநாயகக் கட்சியினர், அவரை “முற்றிலும் நிலைகுலைந்தவர்” (Completely Unhinged) என்று விமர்சித்துள்ளனர். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஒரு “போர்க்குற்றம்” என்றும், அத்தகைய முடிவை எடுக்கும் டிரம்ப் அதிபர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஹக்கீம் ஜெப்ரிஸ் மற்றும் கேத்தரின் கிளார்க் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாடாளுமன்ற விடுமுறையை ரத்து செய்துவிட்டு உறுப்பினர்கள் உடனடியாக வாஷிங்டனுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். டிரம்பின் இந்த “தேவையற்ற போர்” (War of Choice) உலகப்போருக்கு வழிவகுக்கும் முன், அதனைத் தடுக்கத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் சபாநாயகர் மைக் ஜான்சனை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, போரைத் தொடங்கும் அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த “போர் அதிகாரச் சட்டத்தை” (War Powers Resolution) மீண்டும் கையில் எடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டிரம்பின் மனநிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள செனட்டர் கிறிஸ் மர்பி போன்ற தலைவர்கள், அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை (25th Amendment) அமல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்தத் திருத்தத்தின் படி, ஒரு அதிபர் தனது கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தகுதியற்றவர் எனத் துணை அதிபர் மற்றும் அமைச்சரவை கருதினால், அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும். “டிரம்பின் அமைச்சரவையில் நான் இருந்திருந்தால், இப்போதே அரசியலமைப்பு சட்ட வல்லுநர்களை அழைத்து 25-வது திருத்தம் குறித்துப் பேசியிருப்பேன்” என மர்பி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த மார்ஜோரி டெய்லர் கிரீன் மற்றும் வலதுசாரி விமர்சகர் டக்கர் கார்ல்சன் போன்றவர்களும் இந்த முறை டிரம்பின் “நாகரிக அழிவு” கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “ஒரு நாட்டின் நாகரிகத்தையே அழிப்பேன் என்பது கொடூரமானது” என கிரீன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், 52 சதவீத வாக்காளர்கள் டிரம்பைத் தகுதி நீக்கம் (Impeachment) செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று இரவு 8 மணி கெடு நெருங்கி வரும் சூழலில், வெள்ளை மாளிகை மற்றும் கேபிடல் ஹில் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.