உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட கடும் நெருக்கடி காரணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போரைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்று சொல்வார்களே, அதுபோல ஈரான் தனது ஜலசந்தியைத் திறக்க ஒப்புக்கொண்டதால் தான் போர் நிறுத்தம் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், ஈரானிய மக்களும் உலக மக்களும் இதனை ஒரு ‘காமெடி பீஸாகவே’ பார்க்கிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஓடும் ரீல்ஸ்களைப் பார்த்தால் சிரிப்புதான் வரும். ட்ரம்ப்புக்குச் சமாதி கட்டப்பட்டது போலவும், அவர் அந்தச் சமாதியில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களையும் ஈரானிய ஆதரவு பக்கங்களில் பார்க்க முடிகிறது.
என்ன காரணத்தைச் சொல்லி அமெரிக்கா ஈரானைத் தாக்கியது? ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க வேண்டும் என்றுதானே? ஆனால் கடைசியில் நடந்தது என்ன? அந்த மாற்றத்தை அமெரிக்காவால் கொண்டுவர முடிந்ததா? இல்லையே! மாறாக, சற்றும் தொடர்பில்லாத ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டதை ஒரு வெற்றியாகக் காட்டி, ட்ரம்ப் தனது தோல்வியைத் தானே ஒப்புக்கொண்டுள்ளார்.
உலக மக்கள் தற்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளார்கள். “அப்பாடா, போதுமடா சாமி!” என்ற நிலையில் அனைவரும் உள்ளனர். கடந்த 30 நாட்களில் மட்டும் 10 போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது. குறிப்பாக, கடைசி 2 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்ட பிறகு, அமெரிக்கா எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்த அளவுக்கு ஈரானின் வான்பரப்பில் பறக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தற்போது அஞ்சுகின்றன. இதில் ஈரானின் சொந்தத் தயாரிப்பான ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பம் எவ்வளவு துல்லியமாக வேலை செய்கிறது என்பது உலக நாடுகளுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஒட்டுமொத்த அரபு நாடுகளும் இணைந்து அமெரிக்காவுக்கு உதவின; போதாத குறைக்கு இஸ்ரேல், பிரிட்டன் என்று உலகமே இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் ஈரான் நிலைகுலையவில்லை. மாறாகக் கடுமையாகத் திருப்பித் தாக்கி, அமெரிக்காவுக்கு ஒரு பாடத்தைப் புகட்டியுள்ளது. உண்மையில் ஈரானுக்கு ஒரு ‘சல்யூட்’ அடிக்கலாம்; அதில் தவறே இல்லை. நாட்டுத் தலைவரையும் தளபதிகளையும் இழந்த பின்பும் ஈரான் காட்டிய உறுதி, மற்ற நாடுகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாளை அமெரிக்கா எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்கக்கூடும் என்பதால், இது உலக நாடுகளுக்கு ஒரு முக்கியமான பாடம்!
அமெரிக்கா போர் நிறுத்தத்தைச் சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் ஈரான் அது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதனையும் இன்னும் அறிவிக்கவில்லை. மாறாக, தனது ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கில் தேங்கி நிற்கும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள், ஒருவழியாக மெல்ல மெல்லத் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை நோக்கி இனி நகரும்.