Posted in

8 மணி கெடுவிற்கு முன் அதிரடி: கார்க் தீவு மற்றும் முக்கியப் பாலங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி (வாஷிங்டன் நேரம்) காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாகவே, ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சிதைக்கும் பணிகளை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன. ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் முக்கிய மையமான கார்க் தீவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ராணுவ பன்கர்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தற்போது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், அவை டிரம்பின் இறுதி எச்சரிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்க் தீவு மட்டுமன்றி, ஈரானின் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் முக்கிய ரயில்வே மற்றும் சாலைப் பாலங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இஸ்பகான் (Isfahan) மாகாணத்தில் உள்ள யாஹ்யாபாத் ரயில்வே பாலம் மற்றும் கஷன் (Kashan) ரயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஜான்ஜன் (Zanjan) மற்றும் மியானே (Mianeh) இடையிலான ரயில்வே பாலமும் பலத்த சேதமடைந்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் போர் விமானங்கள் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பொதுமக்கள் யாரும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என இஸ்ரேலிய ராணுவம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில், “இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியக்கூடும்” என மீண்டும் ஒருமுறை பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், ஈரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும், ஒவ்வொரு பாலமும் அடுத்த 4 மணி நேரத்திற்குள் சாம்பலாக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். “8 மணி என்பது நடக்கப்போகிறது” (8 PM is happening) என அவர் பாக்ஸ் நியூஸ் பேட்டியிலும் உறுதிபடக் கூறியுள்ளார். இதனால் இன்று இரவு உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய போரின் தொடக்கமாக அமையுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே மேலோங்கியுள்ளது.

மறுபுறம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது சிவப்பு கோட்டைத் தாண்டினால், பிராந்தியத்தைத் தாண்டி அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களைப் பாதுகாக்க மக்கள் மனிதக் கேடயங்களாகத் திரண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் திக் திக் நிமிடங்களுடன் கவனித்து வருகிறது.