தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முழுமையாக இணையத்தில் கசிந்த விவகாரம், இந்தியத் திரைத்துறையையே நிலைகுலையச் செய்துள்ளது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தனது வேதனையை மிகவும் ஆவேசமாகப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தச் செய்தியைக் கேட்டதுமே என் ரத்தம் கொதிக்கிறது; இது ஒட்டுமொத்தத் திரைத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது (Systemic Failure)” என்று சாடியுள்ளார். தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே இதுபோன்ற ஒரு கொடூரமான திருட்டுச் சம்பவத்தால் தான் அனுபவித்த ரணங்களையும், பெரும் நஷ்டத்தையும் நினைவுகூர்ந்து அவர் பதிவிட்டுள்ள வரிகள் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.
“ஒரு திரைப்படம் என்பது ஒரு தனி மனிதனின் உழைப்பு மட்டுமல்ல; அது ஒரு இயக்குநரின் கனவு, தயாரிப்பாளரின் வாழ்நாள் சேமிப்பு மற்றும் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் எதிர்காலம். ஒரு படத்தை இலக்கு வைத்து இப்படித் திருடும்போது, பலரது நம்பிக்கையே சிதைந்து போகிறது” என்று விஜய் தேவரகொண்டா மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், ஒரு படத்தை முழுமையாகத் திருடும் அளவுக்குச் சில மனிதர்கள் தரம் தாழ்ந்து போவது அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்குப் பின்னால் இருப்பவர்களைத் துரிதமாகக் கண்டறிந்து தண்டிக்காவிட்டால் அது சட்டத்தின் தோல்வியே என்றும் அவர் எச்சரித்துள்ளார். விஜய்க்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ள அவரோடு சேர்ந்து, தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவான்கள் சிரஞ்சீவி, மோகன் பாபு மற்றும் இயக்குநர் பாபி ஆகியோரும் ‘ஜனநாயகன்’ கசிவுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.
மறுபுறம், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தயாரிப்பு தரப்பின் சட்டக் குழுவினர் இந்தச் செயலை ஒரு பாரதூரமான கிரிமினல் குற்றமாக அறிவித்து அதிரடி நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். “எங்கள் உழைப்பைத் திருடி, டிஜிட்டல் தளங்களில் பரப்புவது உங்கள் ஒரு நொடிப் பொழுது விளையாட்டாக இருக்கலாம், ஆனால் அது பல ஆயிரம் குடும்பங்களின் வயிற்றில் அடிப்பதாகும்” எனப் படக்குழுவினர் கொதித்துள்ளனர். வாட்ஸ்அப், டெலிகிராம், எக்ஸ் தளம் என எந்தவொரு தளத்தின் வழியாக இந்தப் படத்தைப் பகிர்ந்தாலும், பார்த்தாலும் தனித்தனியாக ஒவ்வொருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 500 கோடி பட்ஜெட் படத்தின் முதுகெலும்பை உடைக்கத் துணியும் இந்தத் திருட்டு கும்பலுக்கு எதிராகத் தமிழகம் தாண்டி அண்டை மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருவது இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.