Posted in

உயிரைக் காவு வாங்கும் வகையில் வந்த தம்பதி: உருக்கமாக வேண்டுகோள் விடுத்த தளபதி!

கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் காரை, பல நூறு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு பின்தொடர்வது ஆபத்து என்று எச்சரித்தும் எவரும் அதைக் கேட்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஒரு தம்பதி தனது ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மிக ஆபத்தான முறையில் விஜய்யின் காரை முந்திச் செல்ல முயன்றது காண்போரை அதிர வைத்தது. பின்னால் அமர்ந்திருந்த மனைவி விஜய்யைப் பார்க்க எத்தனிக்க, ஓட்டுநர் அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டியது ஒரு நொடி பிசகினாலும் பெரும் உயிர்ச் சேதத்தில் முடிந்திருக்கும்.

இப்படித் தலைவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காரையோ அல்லது வேனையோ பின்தொடர்வது என்பது தற்கொலைக்குச் சமமான ஒரு செயலாகும். நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சீறிப்பாயும்போது, சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும் அது தொடர் விபத்துகளுக்கு (Chain Accident) வழிவகுக்கும். விஜய்யை மேடையில் அல்லது பொது இடங்களில் நேரில் பார்க்கப் பல வாய்ப்புகள் இருந்தும், இப்படிச் சாலையில் உயிரைப் பணையம் வைத்துப் பின்தொடர்வதால் அவருக்கு ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாது என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.

ரசிகர்களின் இந்த அதீத ஆர்வம் மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்துகளைக் கவனித்த விஜய், இன்று ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். “தனது காரையோ அல்லது வேனையோ ரசிகர்கள் யாரும் பின்தொடர வேண்டாம்” என்று அவர் கறாராகத் தெரிவித்துள்ளார். இப்படிச் செய்வது பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் தேவையற்ற இடையூறுகளையும் விபத்துகளையும் உண்டாக்கும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வருபவர்கள் தனது கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். “உயிரும் பாதுகாப்பும் தான் மிக முக்கியம்” என்பதை வலியுறுத்தியுள்ள விஜய், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு தனது தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.