Posted in

விஜயை நோக்கி எறியப்பட்ட மர்மப் பொருள்- தலையில் பட்டதால் பரபரப்பு !

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காரைக்குடியில் மேற்கொண்ட ரோடு ஷோவின் போது, அவரது தலையில் மர்மப் பொருள் ஒன்று பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய், இன்று காரைக்குடி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களைச் சந்தித்தபோது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

பிரச்சார வாகனத்தின் மீது நின்று கொண்டு உற்சாகமாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்து வீசப்பட்ட ஒரு மர்மப் பொருள் திடீரென விஜய்யின் தலையைத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், சில நொடிகள் நிலைகுலைந்தாலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு மீண்டும் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

விஜய்யின் தலையில் பட்ட அந்தப் பொருள் ஒரு துணிப்பை போன்ற வடிவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உற்சாக மிகுதியில் ரசிகர்கள் யாராவது அன்பளிப்பாக வீசினார்களா அல்லது திட்டமிட்டு யாராவது செய்தார்களா என்ற கோணத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த மர்மப் பொருள் வீச்சு சம்பவம் காரைக்குடி ரோடு ஷோவில் சிறிது நேரம் பதற்றமான சூழலை உருவாக்கியது. இருப்பினும், தன் மீது அன்பு செலுத்தி காத்திருந்த தொண்டர்களுக்காக விஜய் புன்னகையுடன் தொடர்ந்து கையசைத்து தனது பயணத்தைத் தொடர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.