Posted in

விஜயின் பிரச்சார வாகனத்தை மடக்கிய பறக்கும் படை- சோதனை தீவிரம் !

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் திடீரென மறித்துச் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் எழுச்சி, ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக ஆகிய இரு தரப்பிற்குமே சிம்ம சொப்பனமாக மாறியுள்ள நிலையில், அவருக்கு முட்டுக்கட்டை போட இரு அரசுகளும் மறைமுகமாகப் பெரும் அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இந்த வாகனச் சோதனையை வெறும் ‘வழக்கமான நடைமுறை’ என்று அதிகாரிகள் சொன்னாலும், விஜய்யின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்களின் ‘திட்டமிட்ட சதி’ என்றே அவரது தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.

பிரச்சாரத்திற்காக விஜய் காரில் சென்றபோது, அவரைச் சுற்றி வளைத்த அதிகாரிகள், ஒவ்வொரு மூலையையும் சல்லடை போட்டுத் தேடினார்கள். வாகனத்தில் இருந்த ஆவணங்கள், பிரச்சாரப் பொருட்கள் என எதையும் விடாமல் ஆய்வு செய்ததோடு, விஜய்யிடம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். ஆனால், சோதனையின் முடிவில் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராமல் சிக்கவில்லை என்பதுதான் அதிகாரிகளுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. எவ்வித அனுமதியற்ற பொருட்களும் இல்லாததால், வேறு வழியின்றி அதிகாரிகள் வாகனத்தை அனுப்பி வைத்தனர். “எத்தனை முறை செக் பண்ணாலும் எங்க அண்ணன் கிட்ட ‘தூய்மை’ தான் இருக்கும்” என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி மறுப்பது, கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போடுவது எனத் தமிழக அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக டிவி கே தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் பார்வை ஒரு பக்கம், மாநில அரசின் போலீஸ் கெடுபிடிகள் மறுபக்கம் என விஜய்யைச் சுற்றிலும் ஒரு இறுக்கமான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. “சிங்கத்தை சீண்டினால் சும்மா இருக்குமா?” என்ற ரீதியில், இந்த நெருக்கடிகள் அனைத்தும் விஜய்க்கான மக்கள் ஆதரவை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜனநாயக ரீதியில் களம் இறங்கியுள்ள ஒரு புதிய கட்சித் தலைவரை, அதிகார பலத்தைப் பயன்படுத்தி முடக்க நினைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற முக்கியத் தலைவர்களின் வாகனங்களும் ஆங்காங்கே சோதனை செய்யப்பட்டாலும், விஜய்யை மட்டும் குறி வைத்து இப்படி ஒரு ‘கெடுபடி’ நடப்பது ஏன் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. “யார் தடுத்தாலும் மக்கள் தீர்ப்பே இறுதியானது” என்ற நம்பிக்கையில் விஜய் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் இந்த ‘வெற்றிப் பயணம்’ ஆளும் மற்றும் மத்திய அரசுகளுக்குப் பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!