ஜேர்மன் நாட்டின் டசல்டோர்ஃப் (Düsseldorf) நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு போயிங் 757 ரக விமானம், கிரேக்கத்தின் கொர்ஃபு (Corfu) தீவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் விபத்தை சந்தித்தது. 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்கின.
திக்திக் நிமிடங்கள்:
விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். ஜெர்மன் ஊடகமான WDR வெளியிட்ட தகவலின்படி, விமானத்தின் டர்பைன் காற்றோட்டத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்குக் காரணம். என்ஜின் வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாகப் பயணிகள் கூறியுள்ளனர்.
“திடீரென விமானத்தின் சக்தி குறைந்தது, மேலும் நாம் மேலே செல்லவில்லை என்பதை உணர்ந்தோம்,” என ஒரு பயணி பில்ட் (Bild) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “இது ஒரு நம்ப முடியாத கொடூரமான அனுபவம். நான் என் குடும்பத்தினருக்கு ‘குட்பை’ மெசேஜ் அனுப்பினேன், ஏனெனில் ‘இன்றுடன் எல்லாம் முடிந்துவிட்டது’ என நினைத்தேன்,” என்று மற்றொரு பயணி தனது திகில் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவசரத் தரையிறக்கம்:
விமானியின் துரித நடவடிக்கையால், விமானம் இத்தாலியின் பிரிண்டிசி (Brindisi) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களுக்குள் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
சம்பவத்தின் முழுமையான வீடியோ ஒன்று டிக்டாக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், விமானம் தீப்பிழம்புகளுடன் தரையிறங்குவதைக் காண முடிகிறது, மேலும் பெரும் சத்தமும் கேட்கிறது.
விமான நிறுவனம் என்ன கூறுகிறது?
விபத்து குறித்து விளக்கமளித்த ‘கொண்டோர்’ (Condor) விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “என்ஜின் பின் பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய கோளாறே இதற்குக் காரணம். உண்மையில் என்ஜினில் தீப்பிடிக்கவில்லை,” என்று கூறினார். விமானத்தில் இருந்த பயணிகள் அல்லது ஊழியர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயணிகளை, அடுத்த நாள் வேறு விமானம் மூலம் டசல்டோர்ஃப் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், ஹோட்டல்களில் இடப்பற்றாக்குறை இருந்ததால் சில பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று ஏற்பாடுகளுக்காகச் செலவு செய்த தொகையைத் திரும்பப் பெறலாம் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.