கடந்த கோடைக்காலத்தில் பிரித்தானியாவில் நடந்த கலவரங்கள் முடிந்து ஓராண்டான நிலையில், புதிய அறிக்கை ஒன்று, நாடு இன்னமும் கடுமையான சமூகப் பதட்டங்களின் “வெடிமருந்துக் கிடங்காக” உள்ளது என எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் பியூச்சர் (British Future) மற்றும் பெலாங் நெட்வொர்க் (Belong Network) இணைந்து வெளியிட்ட “தி ஸ்டேட் ஆஃப் அஸ்” (The State of Us) என்ற இந்த அறிக்கை, ஐக்கிய இராஜ்ஜியத்தில் சமூக ஒற்றுமை மற்றும் சமூக வலிமையின் தற்போதைய நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
நாடு முழுவதும் துருவமயமாக்கல் மற்றும் பிரிவினைகள் அதிகரித்துள்ளதாகவும், இது சமூக ஒற்றுமையைக் கடுமையாகப் பாதிப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பான கவலைகள் பொதுமக்களிடையே தொடர்ந்து நிலவுவதுடன், இது சமூகப் பதட்டங்களை மேலும் தூண்டும் காரணியாக உள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த தலைமை இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பொருளாதாரச் சரிவு குறித்த அச்சம், பொதுச் சேவைகளின் தரம் குறைதல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை பரவலான கவலைகளாக உள்ளன. இவை மக்களின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த சமூகப் பதட்டங்கள் மற்றும் குறைபாடுகளை உடனடியாகக் களையத் தவறினால், கடந்த கோடைக்காலத்தில் ஏற்பட்ட கலவரங்கள் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது.
அறிக்கைக்கான ஆய்வுகள்:
இந்த அறிக்கைக்காக, சமூக ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாடு துறையில் செயல்படும் 177 பிரித்தானிய அமைப்புகளின் கருத்துகள் பிராந்திய வட்டமேசை கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளன. அத்துடன், 113 எழுத்துப்பூர்வ சான்றுகளும் பெறப்பட்டன. ஃபோகால்டேட்டா (Focaldata) நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பு மற்றும் கலவரங்கள் நடந்த நகரங்கள் உட்பட எட்டு இடங்களில நடத்தப்பட்ட குழு விவாதங்கள் (focus groups) மூலம் பொதுமக்களின் கருத்துகள் ஆராயப்பட்டன.
நம்பிக்கையும் உண்டு:
கவலைகளுக்கு மத்தியிலும், சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான சில நம்பிக்கைக்குரிய காரணிகளையும் அறிக்கை கண்டறிந்துள்ளது. 69% மக்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதாக உணர்கிறார்கள். கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் சமூக ஒருமைப்பாட்டிற்கான பல உதாரணங்கள் பதிவாகியுள்ளன. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் பல பயனுள்ள பணிகளும் அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
சஜிட் ஜாவித் மற்றும் ஜோன் கிரடாஸ் ஆகியோர் தலைவராக உள்ள சுதந்திர சமூகம் மற்றும் ஒற்றுமை ஆணையத்திற்கு (Independent Commission on Community and Cohesion) இந்த அறிக்கை ஒரு முக்கிய உள்ளீடாக அமையும். “சமூகப் பிணைப்புகள் – சிவில் பங்கேற்பு மற்றும் ஒரு பொதுவான சொந்த உணர்வு – பெருகிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இது நமது சமூகத்தை மேலும் சிதைத்து, பலவீனப்படுத்தி, உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களுக்கு குறைவான மீள்திறன் கொண்டதாக மாற்றியுள்ளது” என சஜிட் ஜாவித் மற்றும் ஜோன் கிரடாஸ் அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர். “மேலும் கலவரங்கள் ஏற்படுவதற்கு நாம் காத்திருக்கக் கூடாது” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.