லிவர்பூல் வெற்றி பேரணியில் கார் மோதிய சம்பவம்: குற்றத்தை மறுத்த முன்னாள் கடற்படை வீரர் !

லிவர்பூல் வெற்றி பேரணியில் கார் மோதிய சம்பவம்:  குற்றத்தை மறுத்த முன்னாள் கடற்படை வீரர் !

லிவர்பூல் கால்பந்து அணியின் வெற்றிப் பேரணியின் போது கூட்டத்துக்குள் காரை வேண்டுமென்றே செலுத்தி, இரண்டு குழந்தைகள் உட்பட பலரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை வீரர், நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளார்.

கடந்த மே மாதம் லிவர்பூல் அணி பிரீமியர் லீக் கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. பால் டாயில் (53) என்ற முன்னாள் கடற்படை வீரர், காரை வேகமாக செலுத்தி கூட்டத்துக்குள் மோதினார். இந்த கோர சம்பவத்தில் 134 பேர் காயமடைந்தனர், அவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பால் டாயில், உணர்ச்சிவசப்பட்டு அழுததாக கூறப்படுகிறது. அவர் மீது ஆரம்பத்தில் 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 24 புதிய குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 6 மாத மற்றும் 7 மாத வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு குழந்தைகள் அடங்குவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நவம்பர் மாதம் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.