தான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரையில் தைவான் மீது சீனா படையெடுக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்கு முன்னதாக, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டார். “சீன அதிபர் ஜி ஜின்பிங் தெளிவாக என்னிடம் சொன்னார். நான் அதிபராக இருக்கும் வரை இதை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று அவர் கூறினார்” என டிரம்ப் குறிப்பிட்டார்.
சீனா இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும் ஜி ஜின்பிங் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கள் குறித்து வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், அமெரிக்க-சீன உறவுகளில் தைவான் மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்த தைவானிய பாராளுமன்ற உறுப்பினர் வாங் டிங்-யூ, பாதுகாப்பு வாக்குறுதிகள் அல்லது வெளிப்புற ஆதரவை மட்டுமே நம்பியிருக்க முடியாது எனக் குறிப்பிட்டார். மேலும், தைவான் தனது சொந்த பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.