அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனமும், மெக்சிகோவின் ஏரோமெக்ஸிகோ விமான நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வரும் கூட்டு ஒப்பந்தத்தை ஜனவரி 1, 2026-க்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே இருபதுக்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு சாதாரண உத்தரவு அல்ல, இது மெக்சிகோவுக்கு அமெரிக்கா அளிக்கும் ஒரு நேரடிப் போர் மிரட்டல் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மெக்சிகோ அரசு தனது விமானநிலையங்களில் அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு எதிராகப் பாரபட்சமாகச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் (MEX) விமானச் சேவைகளைக் குறைத்து, மற்றொரு புதிய விமான நிலையத்திற்கு (AIFA) விமானங்களை மாற்றுவதன் மூலம், மெக்சிகோ தனது உள்நாட்டு விமான நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தச் செயல், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே உள்ள விமான சேவை ஒப்பந்தத்தை மீறுவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. “அமெரிக்காவையும் அதன் விமான நிறுவனங்களையும் சுரண்ட நினைக்கும் எந்தவொரு நாட்டுக்கும் இது ஒரு எச்சரிக்கை,” என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலர் ஷான் டஃபி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்த முடிவு, மில்லியன் கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்களைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்த உத்தரவால், டெல்டா மற்றும் ஏரோமெக்ஸிகோ நிறுவனங்கள் இணைந்து வழங்கும் குறைந்த கட்டணங்கள், கூட்டுப் பயணத் திட்டங்கள், மற்றும் பயணிகளுக்கு இடையிலான சேவை ஒருங்கிணைப்பு போன்றவை இனி இருக்காது. இந்த அதிரடி நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உலக நாடுகளிடையே வர்த்தகப் போர்களைத் தூண்டிவிடும் டிரம்ப்பின் செயல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.