மெக்ஸிகோவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த கோரச் சம்பவங்களில் சிக்கி மேலும் 48 பேர் வரை காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கனமழையால் பல மாகாணங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.