ஜெர்மனியில் நடைபெற்ற ‘ரைடர்மன்’ (Riderman) சைக்கிள் பந்தயத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் சுமார் 70 பேர் காயம் அடைந்துள்ளனர். தெற்கு ஜெர்மனியின் பேடன்-வுர்ட்டென்பெர்க் (Baden-Württemberg) பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து, பேட் டர்ஹைம் (Bad Dürrheim) மற்றும் பீசிங்கன் (Biesingen) நகரங்களுக்கு இடையில் உள்ள சாலையில், ஒரு வளைவில் சைக்கிள் வீரர்கள் நெருக்கமாக வந்தபோது நிகழ்ந்துள்ளது. இதில் முதல் விபத்து ஏற்பட்டதையடுத்து, பின்னால் வந்த வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதி, இரண்டாவது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த விபத்தில் 15 முதல் 20 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும், சுமார் 25 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 35 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், நான்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. இந்தப் பந்தயத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த விபத்து காரணமாக, பந்தயத்தின் மீதமுள்ள போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.