மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாகிராம் மாதந்தோறும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 3 பில்லியனைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த வளர்ச்சி, 2012-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தால் இன்ஸ்டாகிராம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அதன் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடைசியாக 2022-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமின் பயனர் எண்ணிக்கை 2 பில்லியனைக் கடந்ததாக மெட்டா தெரிவித்திருந்தது. அதற்குப் பிறகு, இரண்டு வருடங்களில் கூடுதலாக ஒரு பில்லியன் பயனர்களை இன்ஸ்டாகிராம் பெற்றுள்ளது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டு செயலிகளும் ஏற்கெனவே 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சாதனையை இன்ஸ்டாகிராம் எட்டியுள்ளது.
ரீல்ஸ் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது இன்ஸ்டாகிராமின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த அம்சம் டிக்டாக் போன்ற போட்டி நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்த அதேவேளை, இன்ஸ்டாகிராமின் பயனர்களின் ஈடுபாட்டையும் அதிகரித்துள்ளது.