அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற வழக்கில், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன. இது வழக்கு விசாரணையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரக் காப்பீடு நிறுவனமான ‘யுனைடெட்ஹெல்த் கேர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் தாம்சனை (Brian Thompson) கடந்த டிசம்பர் மாதம் சுட்டுக்கொலை செய்த வழக்கில், லூயிஜி மாங்கியோன் (Luigi Mangione) என்பவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொடூரக் கொலை, பல அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்த வழக்கில் மாங்கியோன் மீது, “பயங்கரவாத செயல்” என்ற கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், நியூயார்க் மாநில நீதிபதி ஒருவர், “மாங்கியோன் ஒரு தனிப்பட்ட நபரை கொன்றிருக்கலாம், ஆனால் அது பயங்கரவாதமாக கருத முடியாது” என்று கூறி, பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்தார்.
நீதிபதியின் இந்தத் தீர்ப்பு, மாங்கியோனின் ஆதரவாளர்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக மாங்கியோன் பார்க்கப்படுவதால், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மாங்கியோன் மீதான “இரண்டாம் நிலை கொலை” குற்றச்சாட்டு தொடர்வதால், அவர் கொலை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு வரும். மேலும், மத்திய அரசு தனியாக மாங்கியோன் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது, அதில் மரண தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டாலும், இந்த வழக்கு இன்னும் பல திருப்பங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் உள்நோக்கங்கள், சமூக அதிருப்தி என பல கோணங்களில் இந்த கொலை வழக்கு, அமெரிக்காவையே உற்று நோக்க வைத்துள்ளது.