Posted in

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி, பிரதமர் விசாரணைக்கு உத்தரவு

ஈராக்கின் கிழக்கு மாகாணமான வாசித்தில் உள்ள குட் (Kut) நகரில் அமைந்துள்ள ஹைப்பர் மால் (Hyper Mall) என்ற வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்தனர்.

ஐந்து மாடிகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் தீ பரவியதில், ஏராளமானோர் உள்ளே சிக்கிக்கொண்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 11 பேர் வரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது, பல குடும்பங்கள் இரவு உணவிற்காகவும், பொருட்கள் வாங்குவதற்காகவும் வணிக வளாகத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், ஏர் கண்டிஷனர் வெடித்ததாக ஒரு உயிர் பிழைத்தவர் கூறியுள்ளார். கட்டடத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததே இந்த பெரும் உயிரிழப்புக்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி (Mohammed Shiaa al-Sudani) முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யுமாறும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி (Mohammed al-Miyahi), இந்த துயர சம்பவத்திற்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்கு நேரடி அல்லது மறைமுகமாகப் பொறுப்பானவர்கள் மீது எந்தவித சலுகையும் காட்டப்படாது என்றும், கட்டட உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையின் ஆரம்பகட்ட முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் பாதுகாப்பு விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படாததால், இதுபோன்ற பெரும் தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 இல் ஒரு மருத்துவமனையிலும், 2023 இல் ஒரு திருமண மண்டபத்திலும் ஏற்பட்ட தீ விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.