இத்தாலியின் லாம்பெடூசா தீவு அருகே, அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சர்வதேச கடற்பரப்பில் நடந்துள்ளது.
லிபியாவிலிருந்து புறப்பட்ட இந்த படகில் சுமார் 100 அகதிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது. முதலில் இரண்டு படகுகளில் வந்த அகதிகள், ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால் அனைவரும் மற்றொரு ஃபைபர் கிளாஸ் படகிற்கு மாற்றப்பட்டனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால், அந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இத்தாலிய கடற்படை, மீட்புப் பணியில் ஈடுபட்டு 60 பேரை பத்திரமாக மீட்டது. மீட்கப்பட்டவர்கள் லாம்பெடூசாவில் உள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 675 அகதிகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது.