ராக்கெட் குப்பைகளால் அழியும் அரிய வகை ஆமைகள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திமிர்ப் பதில்

ராக்கெட் குப்பைகளால் அழியும் அரிய வகை ஆமைகள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திமிர்ப் பதில்

உலகப் பணக்காரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் பேராபத்து! மெக்ஸிகோவின் பாக்தாத் கடற்கரை தற்போது மரண பூமியாக மாறி வருகிறது! இங்குதான் உலகின் அரிய வகை கெம்ப்’ஸ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், இந்தப் புனிதமான கடற்கரை முழுவதும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் பாகங்களால் நிறைந்திருக்கிறது! இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஸ்டார்ஷிப் ராக்கெட் மறுபிரவேசத்தின்போது வெடித்துச் சிதறியதன் விளைவாக, அதன் உடைந்த பாகங்கள், உருகிய பிளாஸ்டிக் துண்டுகள், அலுமினியச் சிதறல்கள் மற்றும் “SpaceX” முத்திரையிடப்பட்ட ராட்சத தொட்டிகள் என அனைத்தும் மெக்ஸிகோ கடற்கரையில் நிரம்பிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்திற்கு மிக அருகில் இருப்பதால், இந்த அபாயம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தக் குப்பைகள், அரிய வகை ஆமைகளுக்கும், டால்பின்கள் போன்ற பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தக் குப்பைகளை கடல் உயிரினங்கள் தவறுதலாக உட்கொள்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என மெக்ஸிகோ விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சமீபத்தில், ராக்கெட் வெடிப்புக்குப் பிறகு இரண்டு டால்பின்கள், ஒரு கடல் ஆமை மற்றும் கிட்டத்தட்ட ஆயிரம் மீன்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!

இந்தக் குப்பைகளால் எந்த “நச்சுத்தன்மையும் இல்லை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை” என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திமிர்ப் பதில் அளித்துள்ளது! மேலும், பெயரளவுக்கு துப்புரவு பணிகளுக்கு உதவுவதாகவும் கூறியுள்ளது.

ஆனால், மெக்ஸிகோ அரசு இந்த விவகாரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை! மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், “ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதல்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை” விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் “உண்மையில் மாசுபாடு உள்ளது” என்பது கண்டறியப்பட்டுள்ளது! சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, “தேவையான வழக்குகளைத் தொடரப்படும்” என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“கோனிபியோ குளோபல்” அமைப்பின் நிறுவனர் ஜீசஸ் எலியாஸ் இபரா கூறுகையில், “500 மீட்டர் கடற்கரையில் ஒரு டன் குப்பைகளை சேகரித்தோம். ஒரு சிறிய குழுவால் அனைத்தையும் சுத்தம் செய்வது சாத்தியமற்றது” என வேதனை தெரிவித்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கும், அரிய வகை உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை சுட்டிக்காட்டி, சூழலியல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.