அமைதிக்குப் பெயர் போன பிரான்ஸ், நேற்று பெரும் போராட்டக்களமாக மாறியுள்ளது. “அனைத்தையும் முடக்கு” (Block Everything) என்ற பெயரில் நாடு முழுவதும் வெடித்திருக்கும் மாபெரும் போராட்டம், அதிபர் இமானுவேல் மக்ரோனின் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் பொருளாதார நெருக்கடி, கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து, அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ராணுவம் போல 80,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல இடங்களில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன. காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், போராட்டக்காரர்களை விரட்டியடித்தும் வருகின்றனர். இந்த மோதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் போராட்டத்திற்கு முக்கிய காரணம், சமீபத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை இழந்த ஃபிரான்சுவா பைரூக்கு பதிலாக, மக்ரோனின் நம்பிக்கைக்குரிய செபாஸ்டியன் லெகார்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதே ஆகும். இது மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மக்ரோனின் கடந்த கால கொள்கைகளுக்கு எதிராக வெடித்த மஞ்சள் மேலாடை (Yellow Vest) போராட்டங்களை நினைவுபடுத்தும் வகையில், தற்போதைய போராட்டங்கள் பரவி வருகின்றன. “அரசியல்வாதிகள் எங்கள் குரலுக்கு செவிசாய்ப்பதில்லை” என்று போராட்டக்காரர்கள் ஆவேசமாக கோஷமிடுகின்றனர். இந்த போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வருமா அல்லது மேலும் வன்முறையாக மாறுமா என்ற அச்சம் பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ளது.