போலந்தின் லுப்ளின் (Lublin) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய ட்ரோனின் உதிரி பாகங்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலந்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள், போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்தபோது, போலந்து மற்றும் நேட்டோ போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களில் ஒன்றின் பாகங்கள் லுப்ளின் பகுதியிலுள்ள Wyryki கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தன. இந்தத் தாக்குதலில் வீட்டின் கூரை மற்றும் ஒரு கார் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இது ஒரு “ஆக்கிரமிப்புச் செயல்” என்று போலந்து இந்தச் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளது. ரஷ்யாவுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, போலந்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல் விபத்தா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.