Posted in

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி! போரின் விதிகளை மாற்றும் பிரம்மாண்ட ஒப்பந்தம்

உக்ரைனுக்கு 150 அதிநவீன ‘கிரிப்பன்’ போர் ஜெட் விமானங்கள்! – ஸ்வீடன் அதிரடி!

ஸ்டாக்ஹோம்/லிங்கோபிங்: உக்ரைன் – ரஷ்யா போரில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படும் வகையில், 120 முதல் 150 அதிநவீன ‘சாப் ஜேஏஎஸ் 39 கிரிப்பன் இ’ (Saab JAS 39 Gripen E) போர் விமானங்களை உக்ரைனுக்கு விற்க ஸ்வீடன் முடிவெடுத்துள்ளது. இது ஸ்வீடன் நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெரிய ராணுவ ஏற்றுமதி ஒப்பந்தமாகும்!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  ஸ்வீடனுக்கு திடீர் விஜயம் செய்து, பிரதமர் உல்ஃப் க்ரிஸ்டெர்சன் உடன் லிங்கோபிங் விமான நிலையத்தில் உள்ள ‘சாப்’ நிறுவன அலுவலகத்தில் சந்தித்தபோது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 வருட பிரம்மாண்ட ஒப்பந்தம்! தயாரிப்பு ஆரம்பம்!

ஸ்வீடன் பிரதமர் க்ரிஸ்டெர்சன், இரண்டு நாடுகளும் இதுதொடர்பான “நோக்க ஒப்பந்தத்தில்” (Memorandum of Intent) கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும் போர் விமானங்களின் எண்ணிக்கை, ஸ்வீடன் இதுவரை ஏற்றுமதி செய்ததிலேயே இரண்டு மடங்கு பெரியது!
  • விமானங்களின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. இந்த முழு ஒப்பந்தமும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது உடனடியாக, ஸ்வீடனால் பத்துக்கும் மேற்பட்ட ‘கிரிப்பன் சி/டி’ ரக பழைய விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம். ஆனால், இது ‘சாப்’ நிறுவனத்திற்கும் ஸ்வீடனுக்கும் உக்ரைனுடனான ஒரு பிரம்மாண்ட ஏற்றுமதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கிறது,” என்று பிரதமர் க்ரிஸ்டெர்சன் உற்சாகத்துடன் கூறினார்.

‘கிரிப்பன் இ’ ஏன் ரஷ்யாவுக்கு சிம்மசொப்பனம்?

Gripen E ரக விமானம் ஒரு சாதாரண போர் விமானம் அல்ல. இது உக்ரைன் களத்தில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக மிகப்பெரிய பலத்தை வழங்கும்:

  • குறுகிய ஓடுபாதையில் புறப்படும் திறன்: இது மிகக் குறைந்த உள்கட்டமைப்பு உள்ள சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது சாதாரண நெடுஞ்சாலைகள் அல்லது தற்காலிக ஓடுதளங்களில் இருந்து கூட எளிதில் புறப்பட முடியும்.
  • 100 கி.மீ தூர ஏவுகணை: இந்த ஜெட், 100 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லக்கூடிய மேற்கத்திய ‘மீடியோர்’ (Meteor) ஏவுகணைகளை ஏவ வல்லது. இது பெரும்பாலான ரஷ்ய போர் விமானங்களைவிட அதிக தாக்குதல் வரம்பை வழங்குகிறது.
  • ரஷ்ய ராடர்களை செயலிழக்கச் செய்யும் சக்தி: இதன் மேம்பட்ட AESA Raven ES-05 ரேடார் மற்றும் மின்னணு போர் முறைகள் (Electronic Warfare systems) மூலம், இது ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை திறம்பட எதிர்கொள்ளும் வல்லமை கொண்டது.

உக்ரைன் விமானிகள் 2023 ஆம் ஆண்டிலேயே இந்த விமானங்களுக்கான பயிற்சியைத் தொடங்கியிருந்த நிலையில், இந்த பிரம்மாண்ட ஒப்பந்தம் மூலம் உக்ரைனின் எதிர்கால வான்படைக்கு புதிய வலிமை பிறந்துள்ளது!

Loading