முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் களத்திற்கு வந்தபிறகு அடுத்த 6 மாதங்களில் தமிழக அரசியல் மொத்தமாக மாறும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் விவகாரம்:
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இந்த விவகாரம் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இது அதிமுகவின் உள்விவகாரம். அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும். நான் பாஜகவின் தொண்டனாக இருந்து கருத்து சொல்வது சரியாக இருக்காது,” என்று கூறினார்.
திருமாவளவனுக்கு ஏன் அக்கறை?
திருமாவளவன் அதிமுக குறித்து பேசியது ஏன் என்ற கேள்விக்கு, “அவர் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அந்தக் கூட்டணிதான் வெல்லும் என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதிமுக எப்படி இருந்தால் அவருக்கு என்ன? என்டிஏ கூட்டணியில் உள்ள தலைவர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், வெளியில் இருந்து இவர்கள் ஏன் பதறுகிறார்கள்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
விஜய் களத்தில்…
அதிமுக, திமுக, என்டிஏ கூட்டணியைப் பற்றிப் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெல்லாது. என்டிஏ கூட்டணி வலிமையாக உள்ளது. இன்னும் 7, 8 மாதங்கள் தேர்தலுக்கு உள்ளன. எல்லாம் நன்றாகத்தான் நடக்கும். விஜய் போன்ற புதிய தலைவர்கள் களத்திற்கு வந்துள்ளார்கள். அவரும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அடுத்த 6 மாதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதிய விஷயங்களை மக்கள் பார்ப்பார்கள். விஜய் களத்திற்கு வந்தபின் அரசியல் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.