அமெரிக்க ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஸ்டீவர்ட் ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக ராணுவத் தளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உடனடியாக பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இதனால், பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஃபோர்ட் ஸ்டீவர்ட் ஹன்டர் ஆர்மி ஏர்ஃபீல்ட் (FSHAA) உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக விண் ஆர்மி சமூக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த 2ஆவது கவச படைப்பிரிவு போர் அணி (2ABCT) பகுதி மட்டும் தொடர்ந்து ஊரடங்கில் உள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். ஜார்ஜியா ஆளுநர் பிரையன் கெம்ப், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகத் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபோர்ட் ஸ்டீவர்ட் ராணுவத் தளம், மிசிசிப்பி நதிக்கு கிழக்கே உள்ள மிகப்பெரிய ராணுவத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.