இசை உலகின் கனவு தகர்ந்தது! பெல்ஜியத்தில் நடைபெறவிருந்த உலகின் பிரமாண்டமான இசைத் திருவிழாவான ‘டுமாரோலேண்ட் 2025’க்கு முன்னதாகவே அதன் பிரதான மேடை கோர தீ விபத்தில் முற்றிலும் அழிந்து நாசமாகியுள்ளது! விழா தொடங்குவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் நடந்த இந்தச் சம்பவம், உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
பூம் நகரில் அமைந்துள்ள டுமாரோலேண்ட் பிரதான மேடையில், நேற்றைய தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடியும், மேடையின் பிரமாண்ட வடிவமைப்பு, அதிநவீன ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் என அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், பட்டாசு அல்லது மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை 18-20 மற்றும் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இந்த பிரம்மாண்ட விழாவில், 200 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர். உலகின் தலைசிறந்த டி.ஜே.க்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் பெர்பாமன்ஸைக் காணக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கனவுகள் தற்போது இந்த விபத்தால் கேள்விக்குறியாகியுள்ளன.
மேடை முழுமையாக அழிந்ததால், ‘டுமாரோலேண்ட் 2025’ விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. விழா ஏற்பாட்டாளர்கள் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இருப்பினும், பிரமாண்டமான மேடை முற்றிலும் அழிந்திருப்பது, விழா ஏற்பாட்டாளர்களுக்குப் பெரும் இழப்பையும், ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.