அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ரியான் ரவுத்தின் மீதான விசாரணை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் பியர்ஸ் நகரில் தொடங்கியுள்ளது.
கடந்த 2024 செப்டம்பர் 15 அன்று, வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள டிரம்ப்பின் சர்வதேச கோல்ஃப் கிளப்பில், ரவுத் ஒரு புதருக்குள் மறைந்து கொண்டு, டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது, அமெரிக்காவின் ரகசிய சேவை (Secret Service) அதிகாரி ஒருவர் சுட்டதால், ரவுத் தனது துப்பாக்கியை கைவிட்டு தப்பி ஓட முயன்றார். பின்னர், நெடுஞ்சாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ரவுத் தானே தன் சார்பாக வாதாடுகிறார். அவர் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த விசாரணை இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி நடந்தது. இதில், ஒரு நபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், டிரம்ப்பின் காதில் குண்டு பாய்ந்து லேசான காயமடைந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து, ஒன்பது வாரங்களில் டிரம்ப் மீது நடந்த இரண்டாவது கொலை முயற்சி இதுவாகும்.