ரஷ்யா நோக்கி அணு குண்டு கப்பலை அனுப்பிய ரம்: இனி என்ன நடக்கும் ?

ரஷ்யா நோக்கி அணு குண்டு கப்பலை அனுப்பிய ரம்: இனி என்ன நடக்கும் ?

வாஷிங்டன்: உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் இடையே வார்த்தைப் போர் முற்றிய நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அதிபரின் “ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்குப் பதிலடியாக, இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பிராந்தியங்களில்” நிலைநிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாதபட்சத்தில் ரஷ்யா மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மெட்வெடேவ், “டிரம்ப், ரஷ்யா இஸ்ரேலோ அல்லது ஈரானோ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் போருக்கு ஒரு படியே” எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மெட்வெடேவின் இந்தக் கருத்துக்களால் கோபமடைந்த டிரம்ப், “ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபரின் மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள்” என குறிப்பிட்டு, பதிலுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளார். “வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த நகர்வு, இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க கடற்படையில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்:

அமெரிக்கக் கடற்படையில் மூன்று முக்கிய வகையிலான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

  • பால்லிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBNs): இவை அணுசக்தி ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடியவை. இவை “ஓஹியோ” ரகத்தைச் சேர்ந்தவையாகும்.
  • தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSNs): இவை எதிரிகளின் கப்பல்களைத் தாக்குவது, உளவு பார்ப்பது, சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. இந்த வகையின் கீழ் “லோஸ் ஏஞ்சல்ஸ்”, “சீவுல்ஃப்” மற்றும் “வர்ஜீனியா” ஆகிய ரகங்கள் உள்ளன.
  • வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSGNs): இவை அணுசக்தி ஆயுதங்கள் அல்லாத பல ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடியவை. ஓஹியோ ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒரு பகுதி இந்த வகையாக மாற்றப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவு உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.